Monday, March 26, 2012

வெளி மாநில மக்களுக்கு தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க கூடாது- தஇமு கோரிக்கை!


வெளி மாநில மக்களுக்கு தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க கூடாது என்று தமிழக இளைஞர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழகம் மிகவும் வேகமாக வெளி மாநிலத்தவர் மயமாகி வருகிறது. தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றை ஏற்கனவே மார்வாடிகளும், குஜராத் சேட்டுகளும், மலையாளிகளும் கைப்பற்றி மேலாதிக்கம் செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுளாக தமிழகத்திற்குள் அயல் மாநிலத்தவர் ஆயிரக்கணக்கில் வந்து குவிகின்றனர். இவர்கள் தமிழர்களின் தொழில், வணிகம், வேலை, கல்வி, உணவுப் பொருள்கள், தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றனர்.
இதனால் தமிழர்கள் தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளை இழக்கின்றனர். வேலையின்மை, வறுமை, சொந்த மண்ணில் அதிகாரம் இன்மை, உணவு, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றில் பற்றாக்குறை என்று தவிக்கின்றனர்.
எந்த வகை வரைமுறையும், வரம்பும் இல்லாமல் வெளி மாநிலத்தவர் தமிழகத்திற்குள் குடியேற அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களால் கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பிற மாநிலத்தவரால் பல்வேறு சமூக, பண்பாட்டுத் தீங்குகளும் உருவாகின்றன.
ஒரு தேசிய இனத்தின் மக்கள் தொகையில் பிற இனத்தவர் 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அத்தேசிய இன மக்கள் எல்லா வகை உரிமை இழப்புகளுக்கும் வாழ்வுரிமை மறுப்பிற்கும் உள்ளாவார்கள்.
தமிழகத்தில் வெளியார் இதேபோல குவிந்து வந்தால், இன்னும் 15 ஆண்டுகளில் தமிழக மக்களின் எண்ணிக்கைக்கு சமமாக வெளி மாநிலத்தவரும் இங்கு நிரம்பிவிடுவர். அதன்பிறகு தமிழகம் தமிழர் தாயகமாக இருக்காது. கலப்பினத் தாயகமாக மாறும்.
வெளி இனத்தார் தங்கு தடையின்றி மிகை எண்ணிக்கையில் குடியேற அனுமதிப்பதால், 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழி வழி தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதன் நோக்கம் தகர்க்கப்படுகிறது.
எனவே 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு தமிழகத்திற்குள் குடியேறிய வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டியது கட்டாயத் தேவை ஆகும். மராட்டியம், அசாம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தற்போது உடனடி நடவடிக்கையாக வெளி மாநிலத்தவருக்கு புதிய குடும்ப அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையோ வழங்க கூடாது என்று தமிழக இளைஞர் முன்னணி தமிழக அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி செய்தி: தட்ஸ் தமிழ் இணையம்,
http://tamil.oneindia.in/news/2012/03/26/tamilnadu-tn-should-not-give-ration-cards-other-state-peoples-aid0176.html)

No comments:

Post a Comment