Friday, June 15, 2012

பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக அரசு உடனே தடை செய்க! - தோழர் நா.வைகறை கோரிக்கை



பான்பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பான்பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் போன்ற போதைப் பாக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்று நோய், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகின்றன. பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

மார்வாடிகளின் தயாரிப்புகளான பான்பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட வைகளை தடைசெய்ய வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. பொது மக்களிடையில் விரிவான விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை நடத்தியுள்ளது. விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி வணிகர்களிடையே மத்தியில் பரப்புரை இயக்கமும், போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இவ்வகைப் பாக்குகளை தடை செய்யாமல் விலையை சற்று உயர்த்திய நேரத்தில் தடை செய்ய வலியுறுத்தி சென்னை கோட்டை முன் மறியல் போராட்டமும், உற்பத்தி செய்யும் சென்னை கோத்தாரி நிறுவன முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டு தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் கைதாகியுள்ளனர்.

கடந்த செயலலிதா ஆட்சி காலத்தில் உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வகை போதைப் பாக்குகள் தடை செய்யப்பட்டன. இதனை எதிர்த்து குட்கா தயாரிக்கும் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடைபெற்றன.

அண்மையில் இந்திய அரசு புகையிலை சார்ந்த பொருட்களை உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளன. இதன் மூலம் பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளின் விற்பனையை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

மத்தியப் பிரதேசம், கேரளா, பீகார் மாநிலங்கள் குட்கா வகை பாக்குகளின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன. குட்கா வகை போதைப் பாக்குகளை தடை செய்யும் நடவடிக்கையில் கடந்த காலத்தில் முன்மாதிரி மாநில அரசாக செயல்பட்ட தமிழகம் இம்முறை பின்தங்கிவிடாமல், பான்பராக், மாணிக் சந்த், உள்ளிட்ட போதைப் பாக்குகளை உடனே தடை செய்ய வேண்டும் என்று தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.