Saturday, December 15, 2012

சென்னை விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் பலியான நிகழ்வு: மாணவர்களைக் குற்றவாளிகளாக்காதீர்! தமிழக இளைஞர் முன்னணி – நடுவண் குழு கண்டனம்
சென்னை விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் பலியான நிகழ்வு:
மாணவர்களைக் குற்றவாளிகளாக்காதீர்!
தமிழக இளைஞர் முன்னணி – நடுவண் குழு கண்டனம்

தமிழக இளைஞர் முன்னணியின் நடுவண் குழுக் கூட்டம் நேற்று(16.12.2012), சென்னைத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து கூட்டத்திற்குத் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமார், துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், நடுவண் குழுத் தோழர்கள் குடந்தை ச.செந்தமிழன், ஈரோடு மாவீரன், பாபநாசம் பிரபாகரன், புதுக்கோட்டை மணிகண்டன், புதுக்குடி ச.காமராசு, முருகன்குடி பிரகாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மறைந்த தமிழ்ச் சான்றோர்கள், மருத்துவர் செ.நா.தெய்வநாயகம், திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார், திருவாட்டி தாமரைப் பெருஞ்சித்திரனார் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்வைத்த அரசியல் அறிக்கைக்குப் பின் விவாதங்கள் நடைபெற்றன. குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணியின் 6ஆவது தமிழக மாநாட்டின் வரவு – செலவு நிதி அறிக்கையை குடந்தைத் தோழர் ச.செந்தமிழன் முன்வைத்தார். அவை ஏற்கப்பட்டன.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

1.        டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்
சனவரி – 4 அன்று தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த வேண்டும்.

2.        வெளியாருக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது
மிகை எண்ணிக்கையில் நுழைந்து, தமிழர் தாயகத்தை சீர்குலைக்கும், வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும், குடும்ப அட்டையும் வழங்கக் கூடாது என வரும் சனவரி 20 முதல் 27 வரை, தமிழகமெங்கும் பரப்புரை இயக்கம் நடத்தப்படும்.

3.        மாணவர்களைக் குற்றவாளிகளாக்காதீர்!
சென்னை கந்தன்சாவடியில், அன்று நடந்த விபத்தில் 4 மாணவர்கள் பலியான சோக நிகழ்வில், பள்ளி மாணவர்களையேக் குற்றவாளியாக்கும் போக்கை அரசும், ஊடகங்களும் செய்து வருவது  கண்டிக்கத்தக்கது. பள்ளி மாணவர்களில், ஒரு சிலர் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வரும் தவறானப் போக்கை, ஒட்டுமொத்த மாணவர்களும் செய்வது போல அரசும் ஊடகங்களும், காட்டுவதன் பின்னணியில், பள்ளி நேரத்தில் அதிகப் பேருந்துகள் இயக்கப்படாதது, தானியங்கிக் கதவு இயங்காத நிலையில் பல அரசுப் பேருந்துகள் பராமரிப்பற்றுக் கிடப்பது, பேருந்து ஓட்டுநர்கள் தானியங்கிக் கதவுகளை மூடாமல் அலட்சியமாக இருப்பது என அரசின் பல குற்றங்கள் மறைக்கப்படுகின்றன.

மேலும், சென்னை நகருக்குள் நுழையும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், அதன் ஊழியர்களின் கேளிக்கைகளுக்காகவும், நகரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில், மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வந்த மக்களை, கண்ணகி நகர், செம்மஞ்சேரி என சென்னையைத் தாண்டி பல ஊர்களுக்கும் அரசு இடம் பெயரவைத்த்தன் காரணமாகவே, அதிகளவில் இடம்பெயர்ந்த மக்கள், தம் வேலைகளுக்காகவும், பள்ளி – கல்லூரிகளுக்காகவும் சென்னை நகருக்குப் பேருந்துகளில் வருவதையும் அரசாங்கம் காண மறுக்கின்றது.

அவரவர் வாழும் பகுதியின் 2 அல்லது 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள், தரமான அருகமை அரசுப் பள்ளிகளைத் திறப்பதன் மூலம் பள்ளி மாணவர்கள் பேருந்துப் பயணங்களைத் தவிர்க்க முடியும். இதை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும். படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் குறித்த தகவல்களை காவல்துறை மூலம், பள்ளி – கல்லூரிக்கு தெரிவிப்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமன்று, பள்ளி – கல்லூரி நடவடிக்கைகளில் காவல்துறையை நுழைக்கும் முயற்சியுமாகும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

4.        சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கண்டிக்கத்தக்கது
இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அதற்கு, தமிழகத்தில் அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசுக் கூறிவந்த நிலையில், சென்னையில் வால்மார்ட் அலுவலகக் கட்டுமானம் நடைபெறுவது அரசின் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. வால்மார்ட் மற்றும் வெளிநாட்டுப் பெருநிறுவனங்களை எந்த வடிவிலும், தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.


தோழமையுள்ள,


கோ.மாரிமுத்து                                   க.அருணபாரதி
தலைவர்                                                             பொதுச் செயலாளர் 


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments:

Post a Comment