Monday, December 31, 2012

சனவரி 4 – அன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் இழுத்துப் பூட்டும் போராட்டம்!


தமிழக இளைஞர் முன்னணி சார்பில், சனவரி 4 – அன்று
தமிழகமெங்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் இழுத்துப் பூட்டும் போராட்டம்!

இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்வரும் சனவரி 4 2013 அன்று தமிழகமெங்கும் நடத்தப்படும் என, கடந்த 17.11.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பரப்புரைகள் தமிழகமெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  

இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, அவர்தம் ஆளுமையைச் சீரழித்து, உடலையும் நாசப்படுத்தும் மதுவை, அரசே விற்பனை செய்து வருகிறது.  உணவைப் போலவே, மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் நிறுவன முதலாளிகள் கொள்ளை இலாபத்தில் விற்றுக் கொண்டிருக்க, அரசாங்கமோ மது விற்பனையில் இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த தீபாவளிப் பண்டிகையின் போதுதமிழக அரசின் மதுபான  விற்பனை நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகள்சற்றொப்ப 270 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்துள்ளதாக அறிவித்தது. தமிழகத்தின் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய மண்டலங்களில், இதுவரை சற்றொப்ப 12 விழுக்காடு மது விற்பனை அதிகரித்திருப்பதாகவும், திருச்சி பகுதியில் மட்டும் இந்த ஆண்டு 22 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் ஒவ்வொரு நாளும் 500 புதிய வாடிக்கையாளர்கள் வருவதாகப் பெருமையோடு தெரிவிக்கிறார் மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரியொருவர். அதாவது, தமிழகத்தில் இயங்கும் 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் மூலம், நாள்தோறும் 30 இலட்சம் புதிய குடிகாரர்களைத் தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

பள்ளி – கல்லூரி மாணவர்களும், படித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களும், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளும் மதுவை நாடிச் சென்று தம் ஆளுமையை சீரழித்துக் கொள்வது இன்று அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் கவலை கொள்ளும் சமூகப் போக்கும் அதிகரித்துவிட்டது.

தமிழகத்தின் பொதுப் பிரச்சினைகளில் சேர்ந்து செயல்பட மறுத்து எதிரெதிர்த் திசையில் செல்லும் அ.திமு.க., தி.மு.க. கட்சிகள் மதுக்கடைத் திட்டத்தில் மட்டும் ஒரே கருத்தில் செயல்படுகின்றன. இரண்டு கழக ஆட்சிகளிலும் டாஸ்மாக் விற்பனை திட்டமிட்டு வேகப்படுத்தப்பட்டது. அரசின் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவிற்பனை நடந்தாலும் மது உற்பத்தி ஆலைகள் மட்டும் தனியாரிடத்தில் தான் உள்ளன. மது உற்பத்தி ஆலைகள் அ.தி.மு.க., தி.மு.க., முக்கியப் புள்ளிகளால் நடத்தப்படுகின்றன.

சுயமாக சிந்திக்கும் ஆற்றல், சொந்தமாக உழைத்து உண்ணும் சுயமரியாதை கொண்ட மனநிலை, இவற்றை அடிப்படையாகக் கொண் ஆளுமையோடு இளைய சமுதாயத்தினர் உருவாவதை இந்தக் கட்சிகள் பொறுத்துக் கொள்வதே இல்லை. அதனால் தான்ஆள்கின்ற மற்றும் ஆண்ட கட்சிகளெல்லாம் மதுவின் சீரழிவுகளுக்குத் தொடர்ந்து துணை போகின்றன.

கடந்த பத்தாண்டுக்கு முன்னால், 2002-03 நிதியாண்டில் 2,828.09 கோடிக்கு மது விற்பனையில் வருவாய் ஈட்டிய டாஸ்மாக் நிறுவனம், 2011-12 நிதியாண்டில் சற்றொப்ப 18,081 கோடி ரூபாய் மதுவை விற்பனை செய்திருக்கிறதுஇந்த நிதியாண்டில் 25,000 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தொகை, உழைக்கும் மக்களில் கணிசமானோர், தமக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்சக் கூலி வருவாயைக் கூட மது அருந்தி இழந்ததால் கிடைத்தத் தொகை. மதுவிற்கு அடிமையாகி நுரையீரல் அழுகி இறந்தவர்களின் குடும்பங்கள், வாழ வழியற்று நடுத்தெருவிற்கு வந்ததால் கிடைத்தத் தொகை.

பலத் தமிழ்க் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்ததால் கிடைத்த தொகையால் தான், இந்த அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் இந்த அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டாமா? அதிகாரிகள் அவமானப்பட வேண்டாமா? அதுதான் இல்லை.

தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை 1,18,610 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக தமிழக அரசு தனது 2012-13 வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், 25,000 கோடிக்கும் மேலாக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளை மூடலாமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்பெரும் பற்றாக்குறைக்கு இடையிலும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதற்கு வேறு வழி என்ன இருக்கிறது என்றும் கேட்கிறார்கள்.

உண்மை நிலை என்னஇலவச அரிசித் திட்டங்களுக்கு செலவிடும் மொத்தத் தொகை, ஆண்டுக்கு வெறும் 10,974 கோடி ரூபாய் தான். இதனை கீழ்வரும் பட்டியல் மூலம் அறியலாம்.



அதாவது, 25 ஆயிரம் கோடி ரூபாயை மது விற்பனை மூலம் பெற்று, அதில் பாதிக்கும் குறைவாக 10,974 கோடி ரூபாயை, இலவசத் திட்டங்களுக்கு செலவிடுகிறது தமிழக அரசு. தமிழர் குடும்பங்களிடமிருந்து பிடுங்கிய தொகையில் சிறுபகுதியை அவர்களிடமே தருவது தான் இந்த இலவசத் திட்டங்கள். இந்தத் திட்டங்களுக்கு வேறு நிதி ஆதாரமே இல்லையா? இருக்கிறது.

தமிழகத்திலிருந்து இந்திய அரசு கடந்த ஆண்டு வசூலித்த வரித்தொகை மட்டும், 79,631 கோடி ரூபாய் ஆகும் அதன் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



தமிழகத்திலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் இப்பெருந்தொகையை தமிழக அரசு, இதுவரை ஒருமுறை கூட முழுவதுமாகக் கேட்கவில்லைஏன்? இத்தொகையில் பாதியைக் கூட பங்காகக் கேட்கவில்லை. தமிழகத்திற்கு உரிமையுள்ள வருமானமான இந்தப் பெருந்தொகையில், தமக்குரியப் பங்கைக் கேட்க வக்கில்லாத தமிழக அரசு, தில்லிக்குச் சென்று 1000 கோடிக்கும், 2000 கோடிக்கும் பிச்சை எடுப்பதை ஏதோ பெரிய சாதனையாக படங்காட்டுகின்றது. இதை நம்புபவர்கள், டாஸ்மாக் இல்லையெனில் அரசே நடக்காது என ஏமாறுகின்றனர்.

இந்திய அரசு தமிழகத்திலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட முன்வரவில்லையெனில், அப்பணியை விழிப்புணர்வுள்ள தமிழக இளையோரைத் திரட்டி நாம் மேற்கொள்வோம்.

அதன்படி, வரும் சனவரி 4 அன்று கீழக்கண்ட இடங்களில், டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடைபெறும்.

·         ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்கிறார்.

·        சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையேற்கிறார்.

·      தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமார் தலைமையேற்கிறார்.

·  சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையேற்கிறார்.
·         பெண்ணாடம் முருகன்குடி முதன்மைச் சாலையில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்கிறார். 

·   சுவாமிமலை ஆத்தங்கரைத் தெரு அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செந்தமிழன் தலைமையேற்கிறார்.

·         புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. அமைப்பாளர் தோழர் மணிகண்டன் தலைமையேற்கிறார்.

·         கிருட்டிணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி கடைவீதியில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ.ஈசுவரன் தலைமையேற்கிறார்.

·     திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கடை வீதியில், த.இ.மு. சார்பில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்னணித் தோழர் பாவலர் மு.வ.பரணர் தலைமையிலும், தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் தியாகராஜன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென தமிழக இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது. 

தோழமையுடன்,
கோ.மாரிமுத்து (தலைவர், தமிழக இளைஞர் முன்னணி),
க.அருணபாரதி (பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி)


No comments:

Post a Comment