Tuesday, December 4, 2012

தஞ்சையில் சாலையை சீர் செய்யக் கோரிய த.இ.மு. கோரிக்கை வெற்றி!


தஞ்சை மாவட்டத்தில், கூனம்பட்டி, ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, சோழகம்பட்டி, நத்தமாடிப்பட்டி, கொப்பம்பட்டி தெம்மாவூர், காரடி வயல், பூச்சுக்குடிவயல், வடிதாப்பட்டி, கிள்ளுக்கோட்டை உள்ளிட்ட 15 கிராமங்களில் வசித்து வரும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தஞ்சை, புதுக்கோட்டைப் போன்ற நகரப் பகுதிகளுக்கு செல்வதற்காக செங்கிப்பட்டியிலிருந்து ஆச்சாம்பட்டி வழியாக கீரனூர் செல்லும் சாலையைப் பயன்படுத்தி வந்தனர்.

இப்பகுதியில் உள்ள செம்மண் குவாரிகளும், கருங்கள் குவாரிகளும் இச்சாலையைப் பயன்படுத்தி வருவதால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அச்சாலை, குண்டும் குழியுமாக சேதப்படுத்தப்பட்டு, இரு சக்கர வாகனம் கூட போக முடியாத அளவிற்கு, போக்குவரத்திற்கு பயனில்லாமல் போனது. இதனால் மக்கள் பெரும் அவதியைச் சந்தித்து வந்தனர். பலமுறை அரசுப் பேருந்துகள் இச்சாலையின் நிலையைக் காரணம் காட்டி, இப்பகுதிக்கு வரமறுத்த அவலமும் நடைபெற்றது.

நகர் புறங்களில் புதிது புதிதாக சாலைகளும், மேம்பாலங்களும் அமைத்துக் கொடுக்கின்ற அரசு, கிராமப்புறச் சாலைகளை வைத்திருக்கும் இலட்சணம் இது தான். இந்நிலையில், இச்சாலையை சீர் செய்யக் கோரி தமிழக இளைஞர் முன்னணி களத்தில் இறங்கியது. சாலையை மேம்படுத்தக் கோரி, அப்பகுதி மக்களிடையே பரப்புரை நடத்தியது.

இன்று(04.12.2012) செவ்வாய் காலை 10 மணியளவில், செங்கிப்பட்டி – கீரனூர் நெடுஞ்சாலையில், மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக இளைஞர் முன்னணி அறிவித்தது.


இதனையடுத்து பதறிய மாவட்ட நிர்வாகம், கிராம நிர்வாக அதிகாரி மூலம் போராட்டக்குழுவினரை நேற்று (03.12.2012) காலை பேச்சுவார்த்தைக்கு அழைததது. தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில், காலை 11 மணியளவில் காவல்துறை உதவி ஆய்வாளர் முன்னிலையில், நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டக்குழு சார்பில், தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில் குமார், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, பூதலூர் ஒன்றிய தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் ஆ.தேவதாஸ், ஆச்சாம்பட்டி தோழர்கள் செபஸ்டியன், க.சண்முகம், பொன். மாணிக்கம், த.தே.பொ.க.. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு, வழக்கறிஞர் ரெ.சிவராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்களின் ஞாயமானக் கோரிக்கைக்கு மதிப்பளிப்பதாகக் கூறிய அரசுத் தரப்பு, அச்சாலையை உடனடியாக மேம்படுத்துவதாக உறுதியளித்தது. நாளை(05.12.2012), அச்சாலையை நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்கள் பார்வையிடுவது எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மக்களைத் திரட்டி, கோரிக்கையை வென்றெடுக்க உதவிய தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர். நாமும் பாராட்டுவோம்!

No comments:

Post a Comment