Monday, December 17, 2012

“ஐ.நா. நம்புவதை விட நான்காம் உலகை நாம் கட்டியெழுப்ப வேண்டும்” தோழர் அருணபாரதி பேச்சு!


ஐ.நா. நம்புவதை விட நான்காம் உலகை நாம் கட்டியெழுப்ப வேண்டும்
தோழர் அருணபாரதி பேச்சு!

ஐ.நா. அமைப்பை நம்புவதை விட நான்காம் உலகை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதி பேசினார்.

2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா. அதிகாரிகளின் பங்கு அம்பலமாகியுள்ள நிலையில், மே பதினேழு இயக்கம் சார்பில் நேற்று(16.12.2012) மாலை வள்ளுவர் கோட்டத்தில், ஐ.நா. அதிகாரிகள் மீது விரிவான விசாரணை கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் உமர் , ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அவரது ஆலோசகரான மலையாளி விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் ஆகியோர் ஈழப்படுகொலையின் போது, எவ்வாறு சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பதை ஆதாரங்களுடன் விளக்கிப் பேசினார். அதன்பின், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், ம.தி.மு.க. தொழிலாளர் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் அரிந்தரதாஸ், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. அதியமான், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசும் போது,ஐ.நா. அமைப்பின் மீதும், சிங்கள அரசின் மீதும் நாம் குற்றம் சாட்டுவதும், அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.  அதே வேளையில், ஐ.நா. ஏன் தமிழ் இனத்திற்கு எதிராக அப்படி செயல்பட வேண்டும்? அதற்கான தூண்டுதல் எங்கிருந்து பிறக்கிறது என சிந்திக்க வேண்டும். அது இந்தியாவிலிருந்து தான் பிறக்கிறது. மன்மோகன் சிங் – சோனியா கும்பலிடமிருந்து பிறக்கிறது.

தமிழீழ இன அழிப்பின் போது, சிங்கள அரசுக்கு பல வகைகளிலும் உதவி செய்து எப்படி இந்திய அரசு வெறியுடன் நடந்து கொண்டதோ, அதே வெறி தான் தமிழகத் தமிழர்களுக்குக் காவிரி நீர் மறுக்கப்படும் போதும், முல்லைப் பெரியாறு அணை உரிமை கேரளாவால் பறிக்கப்படும் போதும் அதைத் தடுக்காத இந்திய அரசிடமிருந்து வெளிப்படுகின்றது. காவிரி நீர் தடுக்கப்பட்டதன் காரணமாக, தற்கொலை செய்து கொண்ட 4 தமிழர்களை, இந்திய அரசு இனப்படுகொலை செய்திருக்கிறது என்று தான் நாம் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு, தமிழகத் தமிழர்களையும், தமிழீழத்  தமிழர்களையும் வஞ்சிக்கும் இந்திய அரசு தான் உலகத் தமிழர்களின் முதன்மை எதிரி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் 2009இல் தமிழீழத்தில் போர் நிறுத்தம் கோரிப் போராடிக் கொண்டிருந்த அதே சூழலில் தான், பாலத்தீனத்தின் காசாப் பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, பாலத்தீனத்திற்காக அவர்களது அரபு நாடுகள் ஐ.நா. சபையில் பேச முன்வந்தன. அதன் காரணமாக 17 நாட்களில் போர் நிறுத்தம் அங்கு வந்தது. ஆனால், தமிழினத்திற்கென்று பேச எந்த நாடும் வரவில்லை. தமிழ் இனத்திற்கென்று பேச ஒரு நாடு இல்லை என்பது தான் காரணம். 7 கோடி தமிழர்கள் கொத்தாக வாழும் தமிழ்நாட்டைக் கொண்ட இந்தியா தான்  போரை நடத்திக் கொண்டிருந்த நிலையில், இந்திய அரசு போர் நிறுத்தம் செய்ய முன்வருமா?

எனவே, நாம் ஐ.நா.விற்கு வெளியே தான் களம் அமைக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான முதலாளிய முதல் உலக நாடுகள், சீனா, ரசியா தலைமையிலான இரண்டாம் உலக நாடுகள், இந்தியா, பிரேசில் போன்ற மூன்றாம் உலக நாடுகள் என உலக நாடுகள் அணிசேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் இதில் எந்த அணியிலும் இல்லை என்பதே நம்முன் உள்ள உண்மை.

தமிழர்கள் நமக்கான நான்காம் உலகத்தை கட்டியெழுப்புவதே இன்றையத் தேவையாக நம்முன் உள்ளது. உலகில் எங்கெல்லாம் தேசத்தை இழந்து, தேச விடுதலைக்காகப் போராடுகிறார்களோ, அது தாய்த் தமிழகமாகட்டும், காசுமீராகட்டும், அசாமாகட்டும், அவர்களெல்லாம் நம் நண்பர்கள் என நாம் அணி சேர்ந்து, நான்காம் உலகத்தைக் கட்டியெழுப்புவோம். தேசங்களற்ற தேசங்களின் அணி சேர்க்கையாக நாம் செயல்பட வேண்டிய நிலையில், தமிழர்களின் இரு தேசங்களான தமிழீழமும், தமிழ்நாடும் தமிழர் சர்வதேசியமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுவே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் எனத் தெரிவித்தார்.

இறுதியாக உரையாற்றிய மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஐ.நா. அய்யோக்கிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ள நாம், 2009ஆம் ஆண்டு தமிழீழத்தில் குண்டு வீச்சை நிறுத்துங்கள் எனக் கோரி, ஐ.நா. மன்றலில் ஈகியான  முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 13 அன்று, இந்தியா மற்றும் உலக நாடுகளில் தமிழர் வாழும் பகுதிகளில் ஐ.நா. அலுவலகங்களை முற்றுகையிட்டு ஞாயம் கேட்போம்! அதற்கான போராட்டத்தை நாம் ஒருங்கிணைந்து நடத்த வேண்டும்எனக் கேட்டுக் கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில், திரளான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி – தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.  










(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : வெற்றிதமிழன்)

No comments:

Post a Comment