Monday, March 4, 2013

மதுக்கான் நிறுவனத்தைக் கண்டித்து நாளை புதுக்குடியில் ஆர்ப்பாட்டம்



====================================================
அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல்
பேருந்து நிறுத்த நிழற்குடைகளை இடித்துத் தள்ளிய 
ஆந்திர மதுக்கான் நிறுவனம் – தேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து
நாளை தஞ்சை மாவட்டம் புதுக்குடியில் ஆர்ப்பாட்டம்!
====================================================

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்களின் வசதிக்காக அமைக்கபட்டிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடைகளையும், மின் கம்பங்களையும்  மதுக்கான் என்ற தனியார் நிறுவனம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு இடித்துத் தள்ளியது. இந்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுக்கான் என்ற தனியார் நிறுவனத்திடம் சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை ஒப்படைத்திருந்தது.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி, காமராட்சிபுரம், நல்லெண்ணபுரம், கீழத்திருவிழாப்பட்டி, நரிக்குறவர் காலனி, மேலத்திருவிழாப்பட்டி, நவலூர், ராயமுண்டான்பட்டி, சொரக்குடிப்பட்டி, சோழகம்பட்டி, சமத்துவபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுக்குடி பேருந்து நிறுத்தத்தையும், 

வளம்பக்குடி, காதாட்டிப்பட்டி, துருசுப்பட்டி, சிதம்பரப்பட்டி, நண்டம்பட்டி, விமம்பட்டி, கிள்ளுக்கோட்டை, மனையேறிப்பட்டி, ராயராம்பட்டி, வெண்டையம்பட்டி, கோட்டரப்பட்டி, புங்கனூர் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வளம்பக்குடி பேருந்து நிறுத்தத்தையும்,

திருமலைசமுத்திரம், எல்லைக்கால்தெரு, அய்யச்சாமிப்பட்டி, மருதக்குடி, மாதுரான்புதுக்கோட்டை, செல்லப்பன்பேட்டை, வைரபெருமாள்பட்டி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருமலைசமுத்திரம் பேருந்து நிறுத்தத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். 

மேற்கண்ட மூன்று பேருந்து நிறுத்தங்கள் கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

ஓர் ஆண்டிற்குப் பிறகும் கூட, மதுக்கான் நிறுவனம் இடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடைகளை கட்டித் தரவில்லை. நிழற்குடை இல்லாததால் பேருந்துகளும் அந்நிறுத்தங்களில் நிற்பதில்லை. எச்சரிக்கை விளக்கு, நகர்புறங்களில் உள்ளதைப் போன்றுள்ள வெள்ளை நிற கோடுகள் உள்ளிட்ட வசதிகள் ஏதுமின்றி இருப்பதால், மக்கள் சாலையைக் கடக்க முற்படும் போது நிறைய விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.  

சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் முழுமையாக அமைக்கப்படாததாலும், புதுக்குடி உள்ளிட்ட பல இடங்களில் சாலையின் குறுக்கே கீழ்பாலங்கள் அமைக்கப்பட்டு அந்தப் பாலங்களில் தண்ணீரை வெளியேற்ற உரிய வடிகால் அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளில் செல்வதாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேற்கண்ட அடிப்படை வசதிகளை மதுக்கான் நிறுவனத்திடமும், தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்திடமும், பலமுறை நேரில் சென்று மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நகர்புறங்களில் மின்விளக்குகள், அதிர்வு கோடுகள், வடிகால் வசதிகள் பேருந்து நிறுத்தஙக்ள் என்று நகர்புறங்களை மேம்படுத்தும் நிர்வாகம், கிராமபுற மக்களின் உயிரையும், உரிமையையும் மலிவாக நினைக்கும் மதுக்கான் நிறுவனத்தையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையையும் கண்டித்து புதுக்குடியில், தமிழக இளைஞர் முன்னணி சாபில் 05.03.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

புதுக்குடி முதன்மைச்சாலையில், 05.03.2013 செவ்வாய் அன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.காமராசு தலைமையேற்கிறார். 

தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் கா.காமராசு, தோழர் ம.கணேசன்(த.இ.மு., மேலத்திருவிழாப்பட்டி), தோழர் மு.அழகுமணி (த.இ.மு., புதுக்குடி), மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழர் கெ.மீனா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

இவ்வார்ப்பாட்டத்தில், திரளான பொது மக்களும், உணர்வாளர்களும் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். 

========================
தமிழக இளைஞர் முன்னணி
பூதலூர் ஒன்றியம்
========================
தொடர்புக்கு 9943894826
========================

No comments:

Post a Comment