Wednesday, October 9, 2013

“ எதுவுமே நிரந்தரமில்லைதான். அதுபோல் இந்தப் பிரிவும் நிரந்தரமில்லாததாக மாறிவிடக் கூடாதா ” தோழர் பா.கலைவாணன் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் உருக்கமான உரை



“ எதுவுமே நிரந்தரமில்லைதான். அதுபோல் இந்தப் பிரிவும் நிரந்தரமில்லாததாக மாறிவிடக் கூடாதா ”  சிதம்பரம் த.இ.மு தோழர் பா.கலைவாணன் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் உருக்கமான உரை


தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரம் நகர துணைத்தலைவர் தோழர் பா.கலைவாணன் 24.09.2013 மாலை காலமானார். அவரது படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 09.10.2013 புதன் காலை 11 மணி அளவில் சிதம்பரம் சிவஜோதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் மறைந்த தோழர் கலைவாணன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி வணக்கம் செலுத்தினர். பின்னர் தோழர் கலைவாணன் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
]
தோழர் கலைவாணன் அவர்களது தோழமைப் பண்பையும், போர்க்குணத்தையும் எடுத்துக்காட்டி தோழர் கி.வெங்கட்ராமன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை தனது நினைவேந்தல் உரையில் தோழர் கலைவாணன் மறைவு கட்சிக்கும், தமிழக இளைஞர் முன்னணி அமைப்புக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் ஏற்பட்ட பேரிழப்பு எனக் குறிப்பிட்டார்.

நிறைவாக தோழர் பெ.மணியரசன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்:
“தோழர் கலைவாணன் படத்தைத் திறந்து வைப்பது மிகப் பெரிய மனத்துன்பமாக இருக்கிறது. கடந்த 2012 டிசம்பர் 3 ஆம் நாள் சிதம்பரத்தில் நடைபெற்ற அவரது திருமணத்தில் என் கையாலேயே மாலை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தேன். அதே கையால் தோழர் கலைவாணன் படத்துக்கு இன்று மாலை சூட்ட வேண்டிய கொடும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

இளம் வயதில் இறந்து போவது தமிழ் நாட்டில் இப்போது அடிக்கடி நிகழ்கிறது. அதை அறிவிக்கும் சுவரொட்டிகளை பார்க்கும் போது மனதிற்கு துன்பமாக இருக்கிறது. ஆயினும் அது நமக்கு நேரடியாக தொடர்பில்லாதவர்கள் மறைவு என்பதால் சில நிமிடங்களில் நம் எண்ணத்திலிருந்து மறைந்து விடுகிறது. அதே இழப்பு நம் குடும்பத்தில் நடக்கும்போது , நம் இயக்கத்தில் நடக்கும் போது அது பெரும் துயரமாக அழுத்துகிறது.

திருமணமாகி ஓராண்டுக்குள்ளேயே கணவனை இழந்த ஜானகிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்வதைப் போல “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்பதே உண்மை நிலை. இதே போல் இளம் வயதில் இறந்து போன ஒரு இளைஞனுக்கு அவனது நண்பர்கள் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை ஒரு ஊரில் பார்த்தேன். அதில் கண்ட வாசகங்கள் நெஞ்சை உலுக்கின. “இந்த உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை என்கிறார்களே! அப்படியானால் உன் பிரிவும் நிரந்தரமானது இல்லை தானே!” என்றது அந்த வாசகம். அதே விருப்பம் தான் கலைவாணன் மறைவிலும் நமக்கு ஏற்படுகிறது. ஆனால், மாண்டவர் மீண்டுவருவது இயற்கையில் நடப்பதில்லை.

கலைவாணனின் குழந்தை அமுதன், கலைவாணனைப் போலவே இருக்கிறான். கலைவாணன் அமுதன் வடிவில் நம்மோடு இருக்கிறார் என்று நாம் ஆறுதல் அடைய வேண்டியது தான்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் கலைவாணன் ஆற்றிய பணிகளை இங்கே தோழர் கி.வெ குறிப்பிட்டார். இருக்கும் போது மட்டுமல்ல இறந்த பிறகும் அவர் தமிழ்ச் சமூகத்திற்கு பயன்பட்டிருக்கிறார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல் செத்தப் பிறகும் கண் தானம் கொடுத்திருக்கிறார்.

இனியும் இந்த இறப்பைப் பற்றியே நினைத்துக் கொண்டிராமல், கலைவாணனின் குடும்பத்தாரும், கட்சி அமைப்புத் தோழர்களும், கலைவாணனின் நண்பர்களும் இன்றோடு துக்கத்தை ஆற்றிக் கொண்டு அவரவர் கடமைகளை செய்ய வேண்டும். கலைவாணன் இல்லாத நிலையிலும் அமுதனை சிறப்பாக வளர்த்துப் படிக்கவைத்து முன் நிறுத்துவதை ஒரு சவாலாக ஏற்று சானகி நிறைவேற்ற வேண்டும். அதற்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து நாங்கள் உறுதுணையாக இருப்போம்”
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

தோழர் பா.கலைவாணனின் மூத்த அண்ணன் திரு பா. அசோக்குமார் தங்களது துக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
படத்திறப்பு நிகழ்ச்சியை கட்சியின் நகர செயலாளர், தோழர் கு.சிவப்பிரகாசம் ஒருங்கிணைத்தார்.

த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் குழ.பால்ராசு, பழ இராசேந்திரன், க.முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர், பெண்ணாடம் த.இ.மு தோழர்கள், த.இமு துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி திரு சி.ஆறுமுகம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, சிறுதொழில் முனைவோர், காய்கறி வணிகர்கள், தையல் கலைஞர்கள் என பல தரப்பினரும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

Saturday, October 5, 2013

தஞ்சையில் வெளியார் எதிர்ப்புப் பரப்புரை


தஞ்சையில் வெளியார் எதிர்ப்புப் பரப்புரை


தஞ்சையில் 05.10.2013 அன்று, தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் நுழைந்து கொண்டிருக்கும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாதென வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

த.தே.பொ.க. தஞ்சை நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில், மேரிஸ் முனையிலிருந்து காலை 11 மணியளவில், தொடங்கியப் பரப்புரை முக்கிய வீதிகளின் வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் துண்டறிக்கைகள் வழங்கியபடி நடைபெற்ற பரப்புரையின் போது, கோரிக்கை வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பல வணிகர்களும், தானி ஓட்டுநர்களும் தானே முன்வந்து தங்கள் வணிக நிறுவனங்களிலும், தானிகளிலும் ஒட்டிச் சென்றனர்.

பரப்புரையில், த.தே.பொ.க. நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், த.இ.மு. நகரப் பொருளாளர் தோழர் லெ.இராமசாமி, தோழர்கள் பாலகிருட்டிணன், சூர்யா உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.