Thursday, April 16, 2015

இணைய சமத்துவத்துவம் கோருவோம்! இந்திய அரசின் ட்ராய் முடிவுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம்! தமிழக இளைஞர் முன்னணி வேண்டுகோள் அறிக்கை!



இணைய சமத்துவத்துவம் கோருவோம்!
இந்திய அரசின் ட்ராய் முடிவுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம்!
தமிழக இளைஞர் முன்னணி வேண்டுகோள் அறிக்கை!


பெருமுதலாளிய நிறுவனங்களும் அவர்களைச் சார்ந்து இயங்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நம்மை கூட்டாக ஆண்டு வருகின்ற நிலையில், மக்களைச் சார்ந்து இயங்கும் பெரு ஊடகமாக இணையப் பெருவெளியே உள்ளது. வலைப்பதிவுகள், முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களே, அவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன. எந்த சார்பும் இல்லாத பல செய்திகளை அறிந்து கொள்ளவும், சமூக வலைத்தளங்களில் உறவாடவும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் முன்வரும் ஆரோக்கியமானப் போக்கும் இதனால் வளர்ந்து வருகின்றது. 

இந்நிலையில், சில இணையதளங்களைப் பார்ப்பதற்கு மட்டும் தனிக் கட்டணம் வசூலிப்பது, சில குறிப்பிட்ட இணையதளங்கள் மட்டும் வேகமாக வரச் செய்வது போன்ற திட்டங்களைக் கொண்ட வழிமுறைகளில் ஏர்டெல் போன்ற பெரு நிறுவனங்கள் ஈடுபடும் ஆபத்தானப் போக்கு தொடங்கியுள்ளது. இதனை மற்ற நிறுவனங்களும் செயல்படுத்தத் தொடங்கினால், நாம் எந்த இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்பதனை எங்கோ அமர்ந்துள்ள சில முதலாளிகளும், அதிகார வர்க்கமும் முடிவு செய்யும் நிலை ஏற்படும்.

வர்த்தக நோக்கில் இது செயல்படுத்தப்பட்டாலும், நாளடைவில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு, அரசின் போக்குகளுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டுக் கண்டிக்கும் இணையதளங்களை மட்டுப்படுத்துவதாக இது காலப்போக்கில் விரிவடையக்கூடும். 

எனவே, இணைய வெளியில் எல்லா இணையதளங்களைப் பார்க்க சம அளவிலான வேகத்தையும், அதற்கேற்ற சம அளவிலான தொகையும் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற ‘இணைய சமத்துவ’க் கொள்கை மிகவும் அவசியமானது. ஏற்கெனவே, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்கென தனிச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, வாட்ஸ் அப் – வைபர் போன்ற சேவைகளின் காரணமாக, தனியார் கைப்பேசி நிறுவனங்கள் சிலவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை வாரியமான - ட்ராய்(TRAI) நிறுவனம், தானே முன்வந்து இணையச் சமத்துவத்திற்கு எதிரான வேலைகளைத் தொடங்கியுள்ளது. 

கடந்த மார்ச் 27-2015 அன்று, இணைய சமத்துவத்திற்கு நேர் எதிரான பரிந்துரைகள் கொண்ட ஓர் அறிக்கையை "Regulatory Framework For Over-the-Top (OTT) Services” என்ற தலைப்பில் வெளியிட்டது. இது குறித்து, வரும் ஏப்ரல் 24ஆம் நாளுக்குள் ட்ராய் நிறுவனத் தலைவரின் மின்னஞ்சலான ‘advqos@trai.gov.in’ என்ற மின்னஞ்சலுக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஏர்டெல் போன்ற பெரு முதலாளிய நிறுவனங்களோடும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோடும் ஒட்டி உறவாடி ஆட்சிக்கட்டிலில் ஏறியவர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடி என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே, இணைய வெளியில் உறவாடுவோர் இச்சிக்கலில் தனிக்கவனம் செலுத்தி, இந்திய அரசின் இம்முயற்சிக்கு எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். 

இந்த எதிர்ப்பை பதிவு செய்வதற்கு வசதியாக, தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து http://www.savetheinternet.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர். அதில் சென்று, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள பதிலை நாம் நம்முடைய கருத்தாக, ட்ராய் நிறுவனத் தலைவர் மின்னஞ்சல் முகவரிக்கு உடனுக்குடன் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தியும், நம் கருத்துகளை அனுப்பலாம். 

இணைய சமத்துவத்திற்கு எதிரான இப்போக்கைப் புரிந்து கொண்டு தமிழக இளைஞர்கள் விழிப்புறவும், அதற்கு எதிராக அணிதிரள வேண்டுமெனவும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்! 

தோழமையுள்ள,
கோ. மாரிமுத்து
தலைவர், தமிழக இளைஞர் முன்னணி.

க.அருணபாரதி,
பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி. 

===========================
அறிக்கை வெளியீடு
===========================
செய்தித் தொடர்பகம்,
தமிழக இளைஞர் முன்னணி. 
===========================
பேச: 7667077075
இணையம்:
===========================