அறிமுகம்


உலகின் முதல் செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, அறிவியலில் ஓங்கி, நீண்ட நெடிய செம்மாந்த வரலாற்றோடு, அறவாழ்வு வாழ்ந்த உலகின் மூத்த இனமானத் தமிழ் இனம், இன்று  அடையாளம் மறுக்கப்பட்டு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.

ஆரியத்தின் விரிவாக்கவாதமும், பெருமுதலாளிகளின்- குறிப்பாக, மார்வாரி, குசராத்தி பெருமுதலாளிகளின்- உலகமயச்சந்தை வேட்டையும், இந்தித் தேசிய இனத்தின் இன மேலாதிக்கமும் இணைந்து உருவான இந்திய ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தேசமாக தமிழ்த் தேசம் சிக்கிச் சீரழிகிறது.

ஆட்சியில், கல்வியில், வழிபாட்டில் தமிழ்மொழி மறுக்கப்பட்டு, நசுக்கப் படுகிறது. இந்திய அரசின் வஞ்சகத்தாலும் வெளி இனத்தாரின் மிகை நுழைவாலும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் சீர்குலைக்கப்பட்டு தமிழ்த் தேசத்தின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது.

ஆற்று நீர் உரிமை மறுக்கப்பட்டு, இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு, அரசியல் உரிமையும், பொருளியல் உரிமையும் மறுக்கப்பட்டு, ஆரியப் பார்ப்பனிய, உலகமய பண்பாடுகளில் நசுக்கப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடக்கிறது தமிழ்த் தேசம். 

இந்த அடிமைத்தனத்தைத் தமிழ்நாட்டு மக்கள் உணராவண்ணம் திரையிட்டு மறைக்கிறது தமிழகக் கங்காணி அரசியல். அது பதவிச் சண்டைகளையே அரசியல் இலட்சியப் போராட்டம் போல் காட்டி திசை திருப்புகிறது.

இந்த நாற்காலி அரசியலுக்கு மாற்றாக,  தமிழ்த்தேசியத்தை முன்வைத்துக் களத்தில் நிற்கிறது தமிழக இளைஞர் முன்னணி.


மொழி ஒடுக்குமுறை, வரலாற்று வழிபட்டத் தமிழர் தாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, வர்ண- சாதி ஆதிக்கம் மற்றும் தீண்டாமைக் கொடுமை, வர்க்கச் சுரண்டல், உலகமயச் சூறை, சூழலியல் பேரழிவு, பெண் ஒடுக்குமுறை, மதச் சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவது. ஆகிய அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் நிலைக்களனாக ஆரியப் புனைவான ‘இந்தியத் தேசியம்இருப்பதால், அனைத்து ஒடுக்குறைகளிலிருந்தும் தமிழர்களை விடுவிப்பதற்கான திறவுகோல் தமிழ்த் தேசியப் புரட்சியே என தமிழக இளைஞர் முன்னணி அறிவிக்கிறது.

அனைத்துவகை சமத்துவத்திற்குமான நிகரமைச் சமூகம் நோக்கிய நெடும் பயணத்தில் ஒரு சனநாயகக் குடியரசாக, தமிழ்த் தேசக் குடியரசு திகழவேண்டும் என தமிழக இளைஞர் முன்னணி உறுதி பூண்டுள்ளது.

பதவி, பணம், விளம்பரம் ஆகியவற்றிற்கு ஆசைப்படாத அர்ப்பணிப்பு அரசியலில் நாட்டம் கொண்ட தமிழ்நாட்டு இளையோரின் அணிவகுப்பாக தமிழக இளைஞர் முன்னணி திகழும்.

நிலவும் சீரழிவு அரசியலுக்கு மாற்று அரசியல் தேடும் விடுதலைச் சிந்தனையுள்ள இளையோர் அனைவரும் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு தமிழக இளைஞர் முன்னணி அழைக்கிறது.

No comments:

Post a Comment