Saturday, January 5, 2013

சிதம்பரம் த.இ.மு தோழர்களை காவல்துறையினர் தாக்கியக் காட்சிகள்! - ஒளிப்பதிவு


மக்களை சீரழித்துக் கொண்டிருக்கும் மது விற்பனையைக் கண்டித்து, அரசின் மதுபானக் கடையான டாஸ்மாக் கடைகளை இளைஞர்களே திரண்டு நின்று இழுத்து மூட வேண்டும் என்பதற்கு அடையாளமாக, சனவரி 4 அன்று தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் “டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்” நடத்தப்படும் என, கடந்த நவம்பர் மாதம் 17 அன்று குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணியின் மாநாட்டில் அறிவித்திருந்தோம். 

அதன்படி, தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் மதுவின் சீரழிவுகளையும், டாஸ்மாக் கடைகள் மூட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டனர். 

சனவரி 4 அன்று திட்டமிட்டவாறு, சிதம்பரம், ஓசூர், சென்னை, வரட்டணப்பள்ளி (கிருட்டிணகிரி மாவட்டம்), தஞ்சை, சாமிமலை (கும்பகோணம் வட்டம்), புதுக் கோட்டை, முருகன்குடி (பெண்ணாடம்) ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தியத் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

சென்னை பல்லாவரத்தில், பேருந்து நிலையத்திற்குள் அடுத்தடுத்து உள்ள 2 மதுபானக் கடைகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட, நான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டோம். 

நாங்கள் கைதாகி மண்டபத்தில் இருந்த போது தான், அத்தகவல் வந்து சேர்ந்தது. 

சிதம்பரம், முருகன்குடி ஆகிய இடங்களில் காவல்துறையினர் மிகக்கடுமையான முறையில் தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர் என்பதே அத்தகவல். 

மது என்ற அரக்கனை சமூகத்திலிருந்து அடியோடு அகற்ற வேண்டுமென, தன்னலமின்றி போராட முன்வந்த த.இ.மு. தோழர்களுக்கு, 'சமூகத்தின் பாதுகாவலன்' எனக் கூறிக் கொள்ளும் காவல்துறையினர் பாதுகாப்பு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? ஆனால், காவல்துறையினர் அதைச் செய்யவில்லை. 

குடிகாரனுக்கு எப்படி கடை மூடுவது பிடிக்காதோ, அதைவிட வேகமான வெறியுடன் கடையை தோழர்கள் மூடிவிடக் கூடாதென்ற பதைபதைப்புடன் நின்றிருந்த காவல்துறையினர், தமிழக இளைஞர் முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரை தாக்கினர். அதைத் தான் இந்தக் காணொளியில் நாம் கண்டோம். 

பெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், டாஸ்மாக் மதுக்கடைக்குப் பூட்டு போட, திரளாக திரண்டு வந்திருந்த தமிழக இளைஞர் முன்னணி, மகளிர் ஆயம் தோழர்களையும், பொது மக்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதை மக்கள் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. 

அதுவும் உங்கள் பார்வைக்கு:
http://www.istream.com/news/watch/253786/Primetime-News--Jan-4-2013

மதுவிலக்கு என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் இளைஞர்களை காவல்துறையினர், இப்படி வெறி கொண்டுத் தாக்குவது, மதுவின் மீது காவல்துறையினருக்கு உள்ள மோகத்தையும், மதுக்கடைகளால் காவல்துறையினருக்குக் கிடைக்கும் கமிசன் வருமானம் பறிபோகுமே என்ற பதைபதைப்பையும் தான் காட்டுகிறது. இக்காவலர்களை இனியும், “சமூகத்தின் காவலர்” என நாம் கருதலாமா? கூடாது. 

தோழர்களை தாக்கிய காவல்துறையினர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருவோம்! மக்கள் போராளிகள் மீதான அடக்குமுறைகள், ஒருபோதும் நம்மை முடக்காது..! மேலும், மேலும் வீரியமாக நாம் மேலெழுவதற்கே அது உதவும்..!

மேலேழுவோம்! 
அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு 
எதிராக மேலேழுவோம்! 

தோழமையுடன்,
க.அருணபாரதி
பொதுச் செயலாளர்,
தமிழக இளைஞர் முன்னணி. 

Friday, January 4, 2013

மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய இளைஞர்கள் மீது தடியடி: தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்





தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை
குடும்பங்களைக் குலைத்து, இளைஞர்களைக் கெடுத்து ஒட்டு மொத்தமாகத் தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடித் தமிழக அரசு முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் சென்னை, சிதம்பரம், முருகன்குடி(கடலூர் மாவட்டம்), கும்பகோணம் - சாமிமலை, தஞ்சாவூர், திருச்சி, கிள்ளுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டணப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று(4.1.2013) மறியல் போராட்டம் நடத்தியுள்ளார்கள். 

சிதம்பரம், முருகன்குடி, கும்பகோணம் - சாமிமலை ஆகிய இடங்களில் காவல்துறையினர் வன்முறையின்றிப் போராடிய பெண்களையும், இளைஞர்களையும் கடுமையாகத் தடியால் அடித்துக் காயப்படுத்தியுள்ளனர். 

சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி முனை அருகில் உள்ள தமிழக அரசு மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்த, ஊர்வலமாகச் சென்ற தோழர்களை காவல்துறையினர் வழிமறித்துத் தடுத்து, தடியடி நடத்தி, காயப்படுத்தி உள்ளனர். 

அறவழிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழக இளைஞர் முன்னணியின் தமிழகத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் மற்றும் தோழர்கள் சுப்பிரமணிய சிவா, சுகன், சதீசு ஆகியோர் காவல்துறையினரின் தடியடியால் காயம்பட்டுள்ளனர். 

மேலும், 15 பேர் மேல், பிணை மறுப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்து, கடலூர் நடுவண் சிறையில் அடைத்துள்ளனர். 

மதுக்கடைகளை மூடி, தமிழக மக்களின் ஒழுக்கத்தையும் பண்பையும் காக்குமாறு வலியுறுத்தி, அறவழிப் போராட்டம் நடத்திய இளைஞர்களைத் தடியால் அடித்துத் காயப்படுத்தி, சிறையில் தள்ளும் அளவுக்கு அங்கு எந்த வன்முறையிலும் இளைஞர்கள் ஈடுபடவில்லை. 

சிதம்பரம் காவல்துறையினரின் அத்துமீறிய வன்முறைத் தாக்குதலையும், மதுவிலக்கு கோரிய இளைஞர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்கு சோடித்துச் சிறையில தள்ளியதையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தடியடி நடத்தக் காரணமாக இருந்த சிதம்பரம் உதவி கண்காணிப்பாளர் துரை, ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மீதும், பெண்ணாடம் (முருகன்குடி), சாமிமலை ஆகிய ஊர்களில், தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழிவாங்கும் நோக்கில் போட்டுள்ள சிதம்பரம் வழக்கைக் கைவிட்டு, சிறையில் உள்ள தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன், 
தலைவர், 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை

நாள்: 04.01.2013
 

டாஸ்மாக் கடையை இழுத்து மூடிய தோழர்கள் மீது காவல்துறையினர் தடியடி!



இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை தமிழகமெங்கும்  இன்று (4.1.2013) தமிழக இளைஞர் முன்னணி நடத்தியது.  இப்போராட்டத்தின் போது சிதம்பரம், சுவாமிமலை(கும்பகோணம்), முருகன்குடி (பெண்ணாடம்) ஆகிய இடங்களில், காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமானத் தடியடியில் த.இ.மு. தோழர்களும் பொதுமக்களும் காயமடைந்தனர்.

சிதம்பரத்தில் காவல்துறையினர் தடியடி - பொய் வழக்கு
சிதம்பரத்தில் மேலவீதி, பெரியார் சிலை அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்பெறுமென முன்கூட்டியே காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு பொது மக்களிடையேயும் விரிவாகப் பரப்புரை செய்யப்பட்டது.






போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக திரண்டுவந்த த.இ.மு. தோழர்களை நடுவழியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதில் போராட்ட தலைவர், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பளார் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

இதற்கிடையில் டாஸ்மாக் கடையின் சட்டர் கதவை இழுத்து கடையை மூடினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 4 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். பிணையில் வரமுடியாத பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை இணைத்து, தோழர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, பெண்களைத் தவிர்த்த ஏனையத் தோழர்கள் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முருகன்குடியில் காவல்துறையினர் தடியடி
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதி முருகன்குடியில் டாஸ்மாக் மதுக்கடை இழுத்துப் பூட்டும் போராட்டம் பெருந்திரள் மக்கள் பங்கேற்போடு எழுச்சியாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்களும் பெண்களுமாய் கூடி தமிழக இளைஞர் முன்னணியின் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.





போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும், ஆண்களும் திரளாகத் திரண்டு, டாஸ்மாக் மதுக்கடையின் சட்டரை இழுத்து மூடினர். அது கண்டு பொறுக்காத, காவல்துறையினர் பெண்களையும், ஆண்களையும் கைகளாலும், தடியாலும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். போராட்டத் தோழர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் தோழர்கள், டாஸ்மாக் கடையின் கதவை முழுவதுமாக இழுத்து மூடினர். தடியடியைக் கண்டித்து, சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற கிராமப் பெண்கள் மதுவின் சீரிழிந்த விளைவுகளை கோபத்தோடு எடுத்துக்கூறி அரசையும் காவல்துறையினரையும் திட்டித் தீர்த்தனர். 21 பெண்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு த.இ.மு. மூத்த தோழர் இரா.பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், மற்றும் த.தே.பொ.க. தோழர் பெரியார் செல்வம், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் தோழர்கள் வித்யா, எழிலரசி, வளர்மதி உள்ளிட் 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை
சென்னை பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். த.இ.மு. தாம்பரம், நகரக் கிளைப் பொறுப்பாளர்களும், தோழர்களும் என போராட்டத்தில் பங்கேற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.




தஞ்சாவூர்
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக்  மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் காலை 11 மணியளவில் நடைபெற்றது.  தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ. செந்தில்குமரன் தலைமை தாங்கினார். த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செந்திறல், த.இ.மு. நகரத் தலைவர் தோழர் இலெ.இராமசாமி, த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, த.தே.பொ.க. நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், மகளிர் ஆயம் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் தோழர் மீனா, தோழர்கள் உமா, கெளசல்யா, உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர்கள் தோழர் இரமேசு, தோழர் சுப்பிரமணியம், மகளிர் ஆயத் தோழர் அபிராமி, தமிழக உழவர் முன்னணி இராயக்கோட்டை செயலாளர் தூர் வாசர் உள்ளிட்ட 17 பேர் கைதாயினர்.



கிள்ளுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டை நகரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இழுத்துப்பூட்டும் போராட்டம்  தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் தேவதாசு, த.இ.மு. நிர்வாகிகள் மற்றும் 7 பெண்கள் உள்ளிட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.




சாமிமலை
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் சாமிமலையில், அரசு மேனிலைப்பள்ளி அருகிலுள்ள மதுக்கடையை இழுத்து பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணி கிளைச் செயலாளர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர்கள் தோழர் செந்தமிழன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் இளவரசி உள்ளிட்ட 10 பெண்களும், திரளானோரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ம.முரளி, தோழர் இளவரசி உள்ளிட்ட பெண்களும் கலந்து கொண்ட போராட்டத்தில், 21 பேர் கைதாயினர்.

கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி மாவட்டம், வரட்டணப்பள்ளியில் டாஸ்மாக் மதுக்கடை பூட்டும் போராட்டம் தமிழக ளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ.ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. காவல்துறையினருக்கும், போராட்டத் தோழர்களுக்கும் தள்ளுமுள்ள ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம் தவிர்த்து, ஏனைய இடங்களில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். 

Wednesday, January 2, 2013

சனவரி 4 - டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடும் போராட்டம்!




தமிழக இளைஞர் முன்னணி சார்பில், 
சனவரி 4 – அன்று தமிழகமெங்கும் 
டாஸ்மாக் மதுக்கடைகள் இழுத்துப் பூட்டும் போராட்டம்!

இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்வரும் சனவரி 4 2013 அன்று தமிழகமெங்கும் நடத்தப்படும் என, கடந்த 17.11.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பரப்புரைகள் தமிழகமெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  

இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, அவர்தம் ஆளுமையைச் சீரழித்து, உடலையும் நாசப்படுத்தும் மதுவை, அரசே விற்பனை செய்து வருகிறது.  உணவைப் போலவே, மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் நிறுவன முதலாளிகள் கொள்ளை இலாபத்தில் விற்றுக் கொண்டிருக்க, அரசாங்கமோ மது விற்பனையில் இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசு தமிழகத்திலிருந்து கொள்ளையடித்துச் செல்லும் பணத்தை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு, மதுக்கடைகளை மூட முன்வரவில்லையெனில், அப்பணியை விழிப்புணர்வுள்ள தமிழக இளையோரைத் திரட்டி நாம் மேற்கொள்வோம்.

அதன்படி, வரும் சனவரி 4 அன்று கீழக்கண்ட இடங்களில், டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடைபெறும்.

·         ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்கிறார்.

·        சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையேற்கிறார்.

·      தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமார் தலைமையேற்கிறார்.

·  சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையேற்கிறார்.
·         பெண்ணாடம் முருகன்குடி முதன்மைச் சாலையில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்கிறார். 

·   சுவாமிமலை ஆத்தங்கரைத் தெரு அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செந்தமிழன் தலைமையேற்கிறார்.

·         புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. அமைப்பாளர் தோழர் மணிகண்டன் தலைமையேற்கிறார்.

·         கிருட்டிணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி கடைவீதியில் நடைபெறும் போராட்டத்திற்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ.ஈசுவரன் தலைமையேற்கிறார்.

·     திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கடை வீதியில், த.இ.மு. சார்பில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்னணித் தோழர் பாவலர் மு.வ.பரணர் தலைமையிலும், தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் தியாகராஜன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென தமிழக இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது. 

தோழமையுடன்,
கோ.மாரிமுத்து (தலைவர், தமிழக இளைஞர் முன்னணி),
க.அருணபாரதி (பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி)